“மாணவிகளுக்கு கல்வி அளிப்பது எங்களின் கடமை”- தலிபான்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன; ஏழு மாதங்களுக்குப் பிறகு பள்ளி சென்ற மாணவிகளின் கண்களில் உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கடந்த…

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன; ஏழு மாதங்களுக்குப் பிறகு பள்ளி சென்ற மாணவிகளின் கண்களில் உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பு கொண்டுவந்தது. தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியவுடன், பெண்கள் அரசு அலுவலகங்களில் பணியாற்றக்கூடாது, உடை விவகாரம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த ஒரு சில நாட்களில் பல பெண்கள் அரசு வேலையை இழந்தனர்.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கும், சில மாணவிகளுக்கும் மட்டுமே பள்ளி செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் உள்பட பல மாகாணங்களில் பள்ளிக் கூடங்கள் இன்று திறக்கப்பட்டன. ஏழு மாதங்களுக்குப் பிறகு பள்ளி சென்ற மாணவிகளின் கண்களில் உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது.

பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆப்கன் பள்ளி கல்வித் துறை செய்தித் தொடர்பாளர், “உலகின் கவனத்தை ஈர்க்க இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. எங்களுடைய மாணவர்களுக்கு கல்வியளிப்பது எங்களது கடமையின் ஒருபகுதி” என்று குறிப்பிட்டார். மேலும், பள்ளிகள் இஸ்லாமிய கொள்கை படி செயல்படும் என்றும் தெரிவித்தார். 12 முதல் 19 வயதுடைய மாணவிகளுக்கு பள்ளிகளை பிரிக்கவும் தலிபான்கள் முடிவு செய்துள்ளனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பெண்கள் கல்வி பயில்வதில் பல தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. பல குடும்பத்தினர் தலிபான்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஏன் தாங்கள் படிக்க வேண்டும் என்ற கேள்வியை மாணவிகள் முன்வைக்கின்றனர். ஏனெனில், படித்தாலும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருப்பதுதான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.