திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டு-உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுகக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் எம்வி முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுாரி கூட்டரங்கில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தாவது:
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சிறந்து விளங்க சிறப்பு திட்டமாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளி உண்டு-உறைவிடம் வசதியுடன் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வரை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்பட்டு நவீன பல்லுாடகக் கணினி வசதியுடன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனித்தனியாக விடுதிகளும் உள்ளன.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2 பெண் காப்பாளர்கள், 2 பெண் பணியாளர்கள், 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு விடுதியில் ஆண் விடுதி காப்பாளர், பணியாளர்கள், காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நமது நாட்டிலுள்ள தரமான கல்லுாரிகளில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அனகா காளமேகன்






