“ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, கால்நடை பராமரிப்பு துறையில், பணி அமர்த்தம் செய்ய வழிவகை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை​யில் அவனி​யாபுரம், பாலமேடு ஜல்​லிக்​கட்டு நிறைவடைந்தது. இந்த நிலை​யில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளை​களும், 550 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர். இதுவரை 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில் கார்த்தி (198) – 12, அபிசித்தர் (65) – 7,
ஶ்ரீதர் (153) – 7 ஆகிய 3 வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் மிரட்டிய காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்தார்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மதுரை என்பது, வீரம் விளைந்த மண். இந்த மண்ணில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்துள்ளேன். தமிழர்களின் அடையாளமான இந்த வீரவிளையாட்டுக்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும்”, சங்க வளர்த்த மதுரையின் அறிவு வளர்ச்சிக்கு “கலைஞர் நூற்றாண்டு நூலகமும்” கட்டிக் கொடுத்திருக்கோம். இன்னைக்கு அலங்காநல்லூர்ல இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்குற இந்த நேரத்துல, காளைகளுக்காகவும் காளையர்களுக்காகவும் அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன்.

பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற்று, அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி இடங்களுக்கு, பணி அமர்த்தம் செய்ய வழிவகை செய்யப்படும்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் பகுதியில, ஜல்லிக்கட்டு காளைகளுக்கான, சிறப்பு உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம், 2 கோடி ரூபாய் செலவுல ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.