அரசு கேபிள் டிவி தலைவராக நீரஜ் மிட்டலுக்கு கூடுதல் பொறுப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் கூடுதலாக வகிப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மறைந்த…

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் கூடுதலாக வகிப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். தனியார் கேபிள் டிவி பொதுமக்களிடம் அதிக அளவு கட்டணம் வசூலித்து வந்த நிலையில், அதனை குறைக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ-சேவை மையங்களை நிறுவி, அதன்மூலம் இணையச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி குறிஞ்சி என்.சிவகுமாரை தலைவராக நியமித்து உத்தரவிட்டிருந்தார்.

ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் குறிஞ்சி என்.சிவகுமார், ஏற்கெனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவரை மாற்றி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நீரஜ் மிட்டல் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல் தற்போது கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படுவார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.