பிரதமர் மோடியை அமெரிக்காவில் சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, குஜராத்தில் 1000 கோடி டாலர் முதலீட்டில் சர்வதேச ஃபைன்டெக் மையம் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 21-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் குஜராத்தில் சர்வதேச ஃபைன்டெக் மையத்தை கூகுள் திறக்கும் என அறிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கல் நிதியில் 1000 கோடி டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.
மோடி அரசாங்கத்தின் முக்கிய பிரச்சாரமான டிஜிட்டல் இந்தியா குறித்த பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் அவர் பாராட்டினார். சுந்தர் பிச்சை தவிர, வாஷிங்டனில் அமேசான் நிறுவனத்தின் சிஇஓஆண்ட்ரூ ஜாஸ்ஸி மற்றும் போயிங் டேவிட் எல். கால்ஹவுன் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஜாஸ்ஸி, இந்தியாவில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தார். அதோடு, “அதிக வேலைகளை உருவாக்க உதவுவதிலும், அதிக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க உதவ உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிகமான இந்திய நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உதவுவதிலும் மிகவும் ஆர்வமாக உள்ளதாக ஜாஸ்ஸி கூறியுள்ளார்.







