அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கோல்ஃப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் வுட்ஸ் கோல்ஃப் விளையாட்டில் 15 முறை சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று கலிபோர்னியாவின் ஹாவ்த்ரோன் ஏவ் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
கலிபோர்னியா அருகே சென்றபோது திடீரென அவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு, மலையடிவாரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரச எண் 911க்கு அழைத்து தகவல் கூறினர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் ஏற்றும்போது வுட்ஸ் சுயநினைவுடனும், தனக்கு என்ன நடந்தது என்று கூறும் நிலையில் இருந்தார். சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் உட்ஸ் உயிர் தப்பினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வுட்ஸுக்கு வலது கால், கணுக்காலில் சில மணி நேரம் வரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வுட்ஸ் கண் விழித்துவிட்டார், எதிரில் இருப்பவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு அதற்கு எதிர்வினையாற்றுகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ட்ரம்ப், குத்து சண்டை வீரர் மைக் டைசன், கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜஸ்டின் தாமஸ் போன்ற பலர் டைகர் வுட்ஸ் விரைவில் நலம் பெற ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







