துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் வைத்து ரூபாய் 41 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள, 928 கிராம் தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையங்களில், திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு, விதவிதமாக கடத்தல் சம்பவங்கள் நடக்கும். அப்படி, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது திருவள்ளூரை சேர்ந்த பாலாஜி நீலகண்டன் (வயது31) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அண்மைச் செய்தி: குடும்ப அட்டை – புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை
விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூபாய் 41 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 928 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாலாஜியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தல் பிண்ணனி குறித்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







