அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே மத்திய தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை…

ஸ்ரீவைகுண்டம் அருகே மத்திய தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கும் பணிக்காக, முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா ஏற்கனவே அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நெற்றி பட்டயம் 3.5 செ.மீ அளவு உள்ளதாகவும், 117 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கத்தால் ஆன பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பாலான தொங்கட்டான், ஈட்டி மற்றும் 9 அம்புகள் என 18 இரும்பு பொருட்களும் அகழாய்வு பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.