கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். காவல்துறை நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இவ்வழக்கை நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. சமீபத்தில் நீதிபதி சம்பத்குமார் முன்பு வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – வி.கே.சசிகலா அறிக்கை
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் மற்றொருவர் மாயமானார். எனவே, யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். அப்போது, இவர்களின் தண்டனை விவரம் வரும் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர், செந்தில்குமார், அருள்செல்வம், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து கண்ணீர் மல்க பேட்டியளித்த கோகுல்ராஜின் தாய், மகனை பறிகொடுத்துவிட்டு தவித்த தமது நிலை வேறு எந்தத் தாய்க்கும் வரக்கூடாது எனக் கூறினார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








