சேலம் அருகே வீரகனூர் ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் ஆட்டுச்சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஆடு விற்பனை சந்தையாகும், இச்சந்தைக்கு சேலம் மாவட்டம் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள், இன்னிலையில் வருகிற 21 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் பண்டிகை என்பதால் வீரகனூரில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள்.
ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர்,வாழப்பாடி, தலைவாசல், மட்டுமின்றி சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள், இஸ்லாமியர்களும் ஆடுகளை வாங்குவதற்கு ஆட்டுச்சந்தைக்கு குவிந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின்பு களைகட்டிய இந்த ஆட்டு சந்தையில் விவசாயிகள் பழைய கால முறை விற்பனையை தவிர்த்து அவர்கள் கொண்டு வந்த ஒரு கிலோ 320 ரூபாய் முதல் 380 ரூபாய் வரை ஆட்டின் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்து வியாபாரம் நடத்தினர்.
மேலும் வரத்து அதிகரித்ததால் ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்யப்பட்டதால் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. ஆடுகளை ஆயிரம் ரூபாய் வரை வியாபாரிகள் குறைத்து கேட்பதால் விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை விற்காமல் திரும்ப எடுத்து சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.







