கோவாவில் ஆளும் பாஜகவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இணைய திட்டம்?

கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 20…

கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 20 இடங்களில் வென்றது.
காங்கிரஸ் 11 இடங்களை கைப்பற்றியது.

பிற கட்சிகள் எஞ்சிய இடங்களை கைப்பற்றின. கோவாவில் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 8 பேரை தங்கள் வசம் ஈர்க்க பாஜக முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா கண்காணிப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கோவாவுக்கு வந்தார். மொத்தமுள்ள 11 எம்எல்ஏக்களில் 10 பேரிடம் தினேஷ் குண்டு ராவ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

2019 ம் ஆண்டிலும் இதேபோன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு 10 எம்எல்ஏக்கள் தாவினர். பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், “பாஜகவில் சேர வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அந்த முயற்சி பலனளிக்குமாறு என்பது கேள்விக்குறிதான்” என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உறுதியளித்து கடிதம் சமர்ப்பித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபாே

கோவா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மைக்கேல் லோபோ உள்ளார். அவர் உள்பட 6 எம்எல்ஏக்கள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.