இயற்கை விவசாயத்தை தன்வாழ் நாள் முழுவதும் ஊக்குவித்த நம்மாழ்வாருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம் மண்ணைக் காத்த நம்மில் ஒருவரான அய்யா நம்மாழ்வார் அவர்களுக்குப் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நமது இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும்
வேண்டுகோள் விடுத்து கோடிக்கணக்கான விவசாயிகளின் சார்பாக தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1546059359855452160
யார் இந்த நம்மாழ்வார்?
தமிழரான கோ.நம்மாழ்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இளங்காடு என்ற கிராமத்தில் பிறந்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார்.
இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தார். 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி இவர் காலமானார்.
இனி விதைகளே பேராயுதம், உழவுக்கும் உண்டு வரலாறு, எந்நாடுடைய இயற்கையே போற்றி, எல்லா உயிரும் பசி தீர்க்க, தாய் மண்ணே வணக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் நம்மாழ்வார்.







