மாற்றுத் திறனாளிக்கும் அவர்களுடன் செல்லும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை முதல்வர் பதவியேற்ற தினத்தன்று வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தங்களுக்கும் இந்த கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த மூன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் தமிழக அரசினுடைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரபூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்று திறன் உடையவர்கள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் எனவும் அவர்களுடன் ஒரு உதவியாளரும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பும் இந்த அரசாணையின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.







