ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 7ம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.
பின்னர் பொதுமக்களின் நலன் கருதி ஜூன் 7ம் தேதிக்கு பின் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 36 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 17321 ஆக குறைந்துள்ளது. இருந்தும் தினமும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது தொடர்பாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியாகும்.







