ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அதன்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்தாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.