76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 76வது சுதந்திர ஆண்டு பிறந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்திய – அமெரிக்கர்களோடு இணைந்து இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ஜனநாயகப் பயணம் மகாத்மா காந்தியின் வழிகாட்டலைக் கொண்டது என்றும் அது உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய சாதனைகளை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரம், சமூகம், அறியவில், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம், சர்வதேச விவகாரங்களில் மிக முக்கிய பங்களிப்பை அளிக்கக்கூடிய கெளரவமிக்க நாடாக உலக அரங்கில் இந்தியா திகழ்வதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமீபத்தில் தான் இந்தியாவின் அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு வந்தபோது, அந்த பயணம் இரு நாடுகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான பிணைப்பு அடுத்த 75 ஆண்டுகளுக்கும் நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். பெருமை கொள்ளத்தக்க சாதனைகளுடன் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் இந்தியாவுடன் எப்போதும் உடன் நிற்கும் நாடு பிரான்ஸ் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக மேக்ரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரக ஊழியர்கள் இணைந்து இசையுடன் பாடிய இந்திய தேசிய கீதத்தை அந்நாடு பரிசளித்துள்ளது. அதில் 75 ஆண்டுகளில் இந்திய அடைந்த பெருமைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
நேபாள நாட்டின் வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா, மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் உள்பட பலரும் இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.