நான்கு மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கியது துரதிஷ்டவசமானது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், இலங்கை கடற்படையால், தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவே அச்சப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்கவும், அச்சமின்றி அவர்கள் மீன்பிடிக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பின்பு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களில் இந்து, மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே புதிய குடியுரிமை வழங்கப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராவ் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மத்திய அரசு அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைத்துப் பார்ப்பதாகவும் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்றும் அப்படிப் பிரித்துப் பார்த்தால் அதனைப் பரிசீலனை செய்வார்கள் என்றும் கூறினார். மேலும் பல்வேறு சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல், நான்கு மாநிலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் முடக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.







