அரசியல் நாடகத்தை விடுத்து மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை!

கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பின்தங்கியுள்ளது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது X தளப் பக்கத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பரங்களில் கவனம் செலுத்திவிட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் அரசியல் வித்தைகளை திமுக அரசு காட்டி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட போதிலும், அதன் முக்கியத்துவத்தை இப்பதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கல்விதான் அடிப்படையானது. ஆனால், கல்வித் துறையில், குறிப்பாகக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும். அரசின் மெத்தனப்போக்கால் தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையை ஆரம்பத்தில் எதிர்த்துவிட்டு, இப்போது அதன் அம்சங்களை வேறு பெயர்களில் அமல்படுத்த முயற்சிப்பது, மாணவர்களின் கல்வியோடு விளையாடும் செயல். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக, ஒரு தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை இழக்கக் கூடாது.

மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் காட்டும் தாமதமும், குழப்பமான முடிவுகளும் தமிழ்நாடு மாணவர்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

இனியாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தனது அரசியல் ஆதாயங்களை விடுத்து, மாணவர்களின் நலனை முதன்மையாகக் கருதி, ஒரு நிலையான மற்றும் தொலைநோக்குடைய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். மாநிலத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டிய கல்வியில், அரசியல் விளையாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.