அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டாலும் கடைசி வரை இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆவேசமாக அறிவித்தனர்.
இதனையடுத்து பொதுக்குழு ஜூலை 11 மீண்டும் கூடும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாகக் கூறி ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்துள்ளது. அதை மீறி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. இந்த பொதுக்குழுவே செல்லாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம். இது சர்வாதிகாரத்தனமாக நடந்த பொதுக்குழு. தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பொதுக்குழுவே ரத்து ஆகிவிடும் என்று கூறினார்.
அவைத்தலைவர் நியமனம் செல்லாது. ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இணைந்து தான் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத் தலைவர் கூட்ட முடியாது என்ற வைத்திலிங்கம்,
“பணத்தைக் கொடுத்து பொய்யான கையெழுத்துகளைப் போட்டிருக்கிறார்கள் கூலிக்கு மாரடிக்கிறவர்கள். கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழுவை நடத்தி இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் தரப்பில் இணை ஒருங்கிணைப்பாளருடன் பேச்சு வார்த்தைக்கு தயார். ஜனநாயக முறைப்படி பொதுக்குழு நடைபெறவில்லை. அவசர அவசரமாக நடைபெற்றது. அரை மணி நேரத்தில் நடைபெற்று முடிந்த ஓரங்க நாடகம் இது” என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.







