தமிழ்நாட்டில் மின் பேருந்துகள் இயக்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தபுள்ளியை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சட்டச்சபையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதற்காக கடந்த 2021-22 பட்ஜெட்டில் ரூ.3,820 கோடியில் ரூ.451.5 கோடி மின்சார பேருந்துகள் வாங்க ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், மின் பேருந்துகளுக்கான உலகளாவிய ஒப்பந்தபுள்ளியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் 321 பணிமனைகளில் உள்ள 21,000 டீசல் பேருந்துகள் மூலம் நாள்தோறும் 16.5 மில்லியன் பேர் பயணம் செய்கின்றனர். 100 பழுதுபார்க்குமிடங்கள் கொண்ட போக்குவரத்துக்கழகத்திடம் உள்ளது.
முன்னோடித் திட்டமாக சென்னை மாநகரத்திற்கு 100 தாழ்தள மின் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் 500 மின் பேருந்துகள் இயக்கவும், மற்ற 400 பேருந்துகள் பிற நகரங்களில் இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாழ்தள மின் பேருந்துகள் 15 ஆண்டு ஆயுள் அல்லது 12 இலட்சம் கிமீ இயங்கும் திறன் உடையதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான, மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற வகையில் இருக்க வேண்டும்.
குளிர்சாதன வசதி, 35 இருக்கைகள், 35 பேர் நின்று செல்லக்கூடிய வகையில், 1 சக்கர நாற்காலி, 1 சக்கர நாற்காலி சாய்வுதளம் இருக்கும் வகையிலும், நாள்தோறும் 16-20 மணி நேரம் இயக்கும் வகையில், 500-1000 மீ தொலைவில் நிறுத்தங்களுடன் 15-25 கிமீ வேகத்துடன் இயங்கும் திறன் உடையதாகவும், நாள்தோறும் 250-350 கிமீ இயக்கக்கூடிய வகையில், 70-100 பயணிகள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும் உள்ளிடவைகள் போன்ற விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது








