2022-23ல்தான் நாட்டின் ஜிடிபி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள் நாட்டின் உற்பத்தியானது கொரோனாவுக்கு முந்தைய நிலைமைக்கு திரும்பாது எனவும் பொருளாதாரம் மீள தொடங்கும்போதுதான் 2019-2020 ஆண்டின் வளர்ச்சி விகிதத்தை நாடு எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் இனி முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காமல் இருந்தால் 2022-23 நிதியாண்டில் வேண்டுமானால் மொத்த உள்நாட்டு உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் முட்டாள்தனமானது எனவும் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்து பிரதமர் மோடி நாட்டு மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினார். தற்பொழுது நாட்டின் சொத்துக்களை விற்று வருகிறார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான பல ஆயிரம் செல்போன் கோபுரங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







