அது ஒரு இரவு கேளிக்கை விடுதி, திடீரென்று ஒரு பெரும் சப்தம். கதவுகளை உடைத்துத் திறந்த போலீசார், துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தனர். உள்ளே இருக்கும் பலரும், மதுபோதையில் மயங்கிக் கிடக்க, சுதாரித்துக்கொண்ட சிலர், விடுதியின் பின்புறம் வழியாகவும், கழிவறைகளுக்கு உள்ளேயும் சென்று தப்பிக்க முயன்றனர். தப்பிக்க முயன்ற ஆண்களில் பலர், பெண்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தனர். பல பெண்கள், வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். உள்ளே நுழைந்த போலீசார் அனைவரையும் மிரட்ட ஆரம்பித்தனர். அங்கே உள்ளவர்கள் மீது பாலியல் அத்துமீறல்களும் நடந்தன. 13 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் பெண் ஆடை அணிந்திருந்த பலரை, தனி அறைக்கு அழைத்து சென்று பாலினத்தை சோதித்த நிகழ்வுகளும் நடந்தேறின. இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக அந்த விடுதியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து ஐந்து நாட்களாக நடந்த போராட்டத்தின் இறுதியில், அந்த விடுதிக்கு தீ வைக்கப்பட்டது. எரியூட்டப்பட்ட தீ ஒரே நாளில் அணைந்தாலும், அதனால் துவக்கி வைக்கப்பட்ட போராட்டத் தீயானது, இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது.

அந்த கேளிக்கை விடுதியின் பெயர் “ஸ்டோன் வால் இன்”. இடம் அமெரிக்கா. அங்கே கைதும், போராட்டமும் தொடங்கிய நாள் ஜூன் 28, 1969. விடுதியிலும் போராட்டத்திலும் கைது செய்யப்பட்ட பெரும்பாலானோர், ஓர் பாலின ஈர்ப்பாளர்கள் என்று அழைக்கப்படும் பால்புதுமையினர். கைது செய்யப்பட்ட பால்புதுமையினரின் மீது ஏவப்பட்ட வன்கொடுமையின் ஒரு வருட நினைவாக 1970இல் அமெரிக்க சாலைகளில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியே, 50 வருடங்கள் கழித்து, Pride walk என, இன்றும் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. மேலும் , சம்பவம் நடந்த ஜூன் மாதமே இன்று வரையிலும் Pride மாதம் என அனைவராலும், குறிப்பாக LGBTQ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1970 இல் நடந்த பால்புதுமையினர் ஆதரவு பேரணி, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. “உரக்க சொல்வேன் நான் Gay என்று.. அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” போன்ற கோஷங்கள் வரவேற்பைப் பெற்றன. அது பால்புதுமையினரின் முதல் பெரும் பேரணி என்பது மட்டுமல்லாமல், அப்பேரணி வெற்றி பெற முக்கிய காரணம், அதில் பெற்றோர் பலரும் பங்குபெற்றதுதான். “என் குழந்தையின் ஆசைகளை அடக்கும் உரிமை எனக்கில்லை, என் குழந்தை ஓரினச்சேர்க்கையாளர் என்பதில் எனக்கு பெருமைதான், எங்களின் ஓரினச்சேர்க்கை குழந்தைகளுக்கு ஆதரவாக, பெற்றோர் நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்” போன்ற வாக்கியங்களை கொண்ட பதாகைகளை கொண்டு, பெற்றோர் பலர் அப்பேரணியில் வலம் வந்து, பலரது பாராட்டையும் ஆதரவையும் பெற்றது.

கடந்த 50 வருடங்களாக இதுபோன்ற Pride பேரணிகள் பல நடந்தும், பால்புதுமையினர் தங்களின் முழு உரிமைகளை இன்றளவும் பெற இயலவில்லை என்பதே உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும் கட்சிகளும், இயக்கங்களும் இருந்தும், பால்புதுமையினருக்கு ஆதரவாக, சில சிறிய இயக்கங்களும் சில கட்சித் தலைவர்கள் மட்டுமே தங்கள் குரலை பதிவு செய்கின்றனர். மதங்களும் சாதியும், அதை சார்ந்த கலாச்சாரங்களும் பால்புதுமையினரை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதனாலேயே, வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்கும் சில அரசியல் கட்சிகளும், கட்சியினரும் இதுபோன்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எனினும் 2018ல் LGBTQ மக்களுக்கு எதிராக இருந்த பிரிவு 377 நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, வரவேற்பை காண முடிந்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அக்காலத்தில் இருந்து பால்புதுமையினருக்கு என்று இயக்கங்களும். குழுக்களும் பெரிதளவு இல்லை என்பதே உண்மை. எனினும் பெரியாருடைய திராவிடர் கழகத்தின் “சுயமரியாதை” என்னும் சொல். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான குரலாக அமைந்தது, ஆகையால் பால்புதுமையினரையும் மறைமுகமாக ஆதரித்தது என்றே கூறவேண்டும். 2019 ஆம் ஆண்டு “ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே என்ற அடிப்படையில். அனைத்து உரிமைகளுக்கும் உரியவர்களே” என திராவிட கழகத்தினர் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
இன்று பால்புதுமையினருக்கு என்று பெரும் குழுக்களும் ஆதரவும் அதிகரித்துள்ளது. எனினும், அவர்களுக்கான உரிமைகளும், அங்கீகாரமும் பாதுகாப்பும், முழுமையாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக நகரங்களை விட. கிராமப்புற பகுதிகளில் இதுபோன்ற ஆதரவுகள் மிகக்குறைவாகவே உள்ளன.
பால்புதுமையினர் வேற்றுகிரகவாசிகள் அல்ல. அவர்கள் நம் குடும்பத்தினராக இருக்கலாம், நாம் நண்பர்களாக இருக்கலாம் அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுக்கு ஏற்படும் ஓர்பாலினத்தின் மீதான ஈர்ப்பும், காதலே அன்றி, வேறொன்றுமில்லை. அதில் தவறும் இல்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலுறவைப் பற்றியும். பால்புதுமையினர் பற்றியும் விவாதிக்கப்படுவதில்லை. திரைப்படங்களிலும் தங்களை சரியான முறையில் காட்டும் திரைப்படம் இன்றளவும் வெளிவரவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் LGBTQ மக்கள். சமூகத்தை விடவும் பால்புதுமையினர் பெரிதும் அஞ்சுவது, தங்கள் பெற்றோர்களுக்காகவே. இந்த சமூகம் என்னை தவறாக நினைக்கும் என எண்ணும் பெற்றோர்களால், ஒதுக்கப்படும் பால்புதுமையினர் பலர், தவறான வழியில் செல்லுவதை நாம் கண்கூடாக பார்க்க நேரிடுகிறது. பல ஆணவக்கொலைகளும் இதில் அடக்கம். பகலில் திருநங்கைகளை கேலி செய்யும் ஆண்கள் பலரும், தங்கள் காம இச்சைகளுக்காக இரவில் அவர்களை பயன்படுத்துவது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியாக பல பிரச்னைகளை LGBTQ மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே வருகின்றனர் என்பதே நிதர்சனம்.

தான் காதலிக்கும் ஆணின் கருவை சுமக்க, கடற்குதிரைகள் போல தயாராக இருக்கும் ஆண்கள் பலர் இங்கு உண்டு. கருவை சுமக்க இயலவில்லை என்றாலும், குழந்தையை தத்தெடுத்தாவது ஒரு குடும்பமாய் வாழ நினைக்கும் பெண் காதலர்கள் பலரும் இங்கு உண்டு. பகலில் மறைந்து இரவில் சுதந்திரமாய் வாழும் இந்த இருள் வாழ்க்கை மாறாதா? என்று ஏங்கும் திருநங்கைகள் பலரும் இங்கு உண்டு. சாதி மதம் போன்று, பாலினமும் பாலுறவும் குறித்து ஒதுக்குவதும், ஒருவகையான ஒடுக்குமுறை தான். அப்படியாக பால்புதுமையினரும் இச்சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்பவர்கள்தான். ஒடுக்கப்பட்ட அவர்களுக்கான உரிமையையும், பாதுகாப்பையும் அரசும் சட்டமும் வழங்கினால் மட்டுமே, சமூகநீதிக்கு வழிவகுக்கும். Pride மாதத்தில் மட்டுமல்லாது, அனைத்து மாதத்திலும், அனைத்து நாளிலும், தங்களுக்கு பிடித்த துணையுடன் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ, இந்த உலகத்தையே ஒரு “ஸ்டோன் வால் இன்” விடுதியாக உருவாக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.







