கொட்ட இடம் இல்லாததால் 3-வது நாளாக தேங்கிய குப்பைகள்!

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள…

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும்
குப்பைகளை, தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு
வருகிறது. தினசரி சேகரிக்கப்படும் 5 டன் அளவிலான குப்பைகளை உரமாக்கும்
திட்டத்திற்காக, 5 ஆண்டுகளுக்கு முன்பு உத்தப்பநாயக்கணூர் பகுதியில் உரக்கிடங்கு
அமைக்கப்பட்டது. மேலும், குப்பைகளை முறையாக உரமாக மாற்றாமல், குப்பைகள்
உரக்கிடங்கில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, குப்பைகள் எரியூட்டப்படும் புகை காரணமாக பல்வேறு நோய் தொற்று
ஏற்படுவதாக குற்றம் சாட்டி, உத்தப்பநாயக்கணூர் மற்றும் உ.வாடிப்பட்டி கிராம
பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும், பொதுமக்களுடன்
நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் குப்பைகளை கொட்டி எரியூட்டப்படுவதை
தடுத்து நிறுத்துவதோடு , குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்து கொள்வதாக
நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குப்பைகளை கொட்ட மாற்று இடமும் நகராட்சி நிர்வாகத்தால் தேர்வு
செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், குப்பைகளை கொட்ட இடம் இன்றி
நகராட்சி நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.குப்பைகளை கொட்ட இடம் இல்லாத
சூழலில், உசிலம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி வாகனங்களிலேயே
மூன்றாவது நாளாக குப்பைகளை தேக்கி வைத்துள்ளனர்.இதன் காரணமாக நோய்
தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.