ராசிபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் அவதிப்படும் மக்கள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஏரியில் மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது – இதனால், மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டியபட்டி மற்றும்…

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஏரியில் மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது – இதனால், மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டியபட்டி
மற்றும் ஓலைப்பட்டி இடையே, சேமூர் ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக, ஏரி முழுமையும் நிரம்பி உள்ளது.
இதனால், இந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் உள்ளது. இந்நிலையில், இந்த
மீன்கள் கடந்த இரண்டு நாட்களாக செத்து மிதந்து வருவதால், சுற்றுவட்டார
பகுதிகள் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், இந்த நீரை குடிக்கும் ஆடு மற்றும் மாடுகள் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக
மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 500 ஏக்கரில் நெல், பருத்தி மற்றும் வெங்காயம்
ஆகியவற்றை விவசாயிகள் இந்த ஏரியின் நீர் மூலம் பயிரிட்டு வருகின்றனர். மேலும்,
ஏரியை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பராமரித்து, கழிவுகள் ஏதும் கொட்டாதபடி
பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏரியை ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் எடுத்து மீன் பிடிக்க
ஏலம் விடப்படுவதாக வந்த தகவலை அடுத்து, பாசன விவசாயிகள் கடந்த ஆண்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஏரியை கொண்டு
வந்தால், ஏரியின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றனர். மேலும், மீன்
பிடிப்புக்கு அனுமதி வழங்கினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஏரியை வழங்க அனுமதிக்க கூடாது என
விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனால், இங்கு மீன் பிடிக்க ஏலம் விடுவது
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, மீன்கள் செத்து மிதப்பதால் மர்மநபர்கள்
யாரும் ஏரியில் விஷம் கலந்திருப்பார்களா என, மாவட்ட நிர்வாகம் ஏரியின் நீரை
சோதனை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.