சிவகாசி அருகே, சிவன் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி பஞ்சாயத்தில் நாரணாபுரம் ரோட்டில் சிவன் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. எவ்வித பயன்பாட்டிலும் இல்லாத இந்த நிலத்தில், கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குப்பைகளையும், அச்சக கழிவுகளையும் கொட்டி வந்தனர். இதனால் அந்த பகுதி குப்பை மலையாக காட்சி அளித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள், அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற கோரி சிவகாசி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தனர்.
பொதுமக்களின் மனுவை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. அசோகன், அதிகாரிகளுடன் அப்பகுதியை பார்வையிட்டார். பின்னர் அங்கு குவிந்துள்ளக் குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில் இதற்கான பணிகளை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார். மேலும் அவர், குப்பைகள் அகற்றப்பட்ட பின்னர் அப்பகுதியில் மரம் நடப்படும் எனவும், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
—-சௌம்யா.மோ







