திருச்சி அருகே 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அந்த வீடியோவை வெளியிட்டதால் 3 பேரை பிடித்த போலீசார், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள அந்தரப்படி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தாய் தந்தை இல்லாததால் உறவினரின் ஆதரவில் வசித்து வந்தார். சிறுமியை ரகுநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு சிறுமிக்கு, குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது நண்பர்களான கணேசன், மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை தொடர்பு கொண்டு அங்கு வரமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த 4 பேரும் ரகுநாதனுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
இதையடுத்து, சிறுமியை அங்கிருந்து விடுவித்த அவர்கள், இதுபற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். மேலும் பல்வேறு இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்று மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை அறிந்த அவரது உறவினர்கள் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் திருச்சியை சேர்ந்த இளைஞருக்கு சிறுமியை திருமணம் செய்து கொடுத்தனர். சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தகவல் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த குழந்தை திருமணம் குறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமி தற்போது காப்பகத்திலேயே தங்கி படித்து வருகிறார்.
இதற்கிடையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து இளைஞர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரகுநாதன் என்பவர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த சிறுமியின் உறவினர்கள், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து காப்பகத்தில் இருந்த சிறுமியை, மகளிர் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 21 வயதான ரகுநாதன், 24 வயதான மணிகண்டன், கணேசன் உள்ளிட்ட 5 பேரும் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் 3 தனிபடைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் ரகுநாதன், கணேசன், மணிகண்டன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வருகின்றனர்.








