கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக வந்து உள்ள தீர்ப்பை வரவேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக தீர்ப்பு வந்துள்ளதாக கூறினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் ஓபிஎஸ் அணியில் இணையவில்லை. அமமுகவில் இருந்து தான் ஓபிஎஸ் தரப்பில் இணைந்து வருகின்றனர்.
வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஓபிஎஸ் தரப்பு எங்கு சென்றாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்…








