இலங்கையின் முன்னாள் பிரதமர் கொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்க துறையினர்.
இலங்கையின் முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த குணசேகரன் என்ற பிரேம்குமார் என்பவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரோடு அவரது மகன் மற்றும் முகமது ஷெரிப், கென்னடி, உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் மற்றும் கடத்தல் வழக்குகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். பின்னர் அவர்கள், சட்டவிரோதமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய அடையாளங்களை மாற்றி இந்தியாவில் குடியிருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் க்யூ பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து, இவர்களுக்கு சொந்தமான கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு சொகுசுபங்களா மற்றும் திருவண்ணாமலை உள்ள இரண்டு விவசாய நிலங்கள் என மொத்தம் 33 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்த சொத்துக்கள் அனைத்துமே கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துக்கள் எனவும் இதற்கு முறையான வருமான விளக்கங்கள் அளிக்காததால் இவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குணசேகரன் என்பவர் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர் என்றும், இலங்கையினுடைய முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரா துங்காவை கொல்ல முயன்ற வழக்கும் அவர் மீது நிலுவையில் உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர்.







