தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கிடையில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன், வெளியிட்டிருந்த வீடியோவில், தேர்தலின்போது ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சரியாக பணியாற்றவில்லை என்றும் கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைக்காத விசிகவினர் குறித்து தகவல் திரட்டப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
மேலும், திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும். திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நான் வெளியிட்ட வீடியோவின் ஒரு சில இடங்களில் தான் விசிகவினர் பணியாற்றவில்லை என்று கூறினேன். அது, எங்கள் கட்சித் தொண்டர்களை நெறிப்படுத்துவதற்காக தெரிவித்த கருத்து.
திமுக கூட்டணிக்காக எங்கள் கட்சி தோழர்கள் ஆற்றியிருக்கிற பணி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. சில இடங்களில் என்று நான் கூறியதை ஊதி பெரிதுபடுத்துகிறார்கள். திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
விஜயை முன்வைத்து பலர் சூதாட்டக் காய்களை நகர்த்துகிறார்கள். பாஜக ஆதரிக்கும் வட இந்தியா நிறுவனங்கள்தான் அதிமுக கூட்டணிக்கு முன்னிலை என தெரிவித்து உள்ளன. ஆனால், எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். திமுக ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.




