இந்திய கால்பந்து வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் நீதிமன்றம் கவனமாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய சட்ட விதிகள் இறுதி செய்யப்பட்டு அமல்படுத்தப்படாததால், FIFA அமைப்பு இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு வரும் 28-ம் தேதி நடத்தப்படவிருந்த தேர்தலை 1 வாரம் தள்ளிவைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச கால்பந்து சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய சட்ட விதிகளை இறுதி செய்வது தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணனை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நீதிமன்றம் கவனமாக உள்ளது.
மேலும் இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கான தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நமது நாட்டில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவதும், நமது வீரர்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதும் எந்த வகையிலும் தடை பட்டுவிடக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








