புதுச்சேரியில் இரவு நேர மற்றும், வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது.
கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனுடன், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய இரவு நேர ஊரடங்கு, வரும் திங்கள்கிழமை காலை 5 மணி வரையிலான 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
முழு ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய பணிகளைத் தவிர, பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பழங்கள், மளிகை, பாலகங்கள் மற்றும் இறைச்சி கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த பயணங்களுக்கும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்வதற்கும் தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க மின்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் பார்சல் மட்டும் விநியோகம் செய்யலாம் என்றும், உணவு பார்சல் எடுத்து செல்லும் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சனிக்கிழமை வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் இயங்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஊரடங்கு என்பதால், உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.







