ரூ.6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது. இது குறித்து கரூர் லோகநாதன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
“மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட்
என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில் என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு
செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாக ஆசை வார்த்தை கூறி
முதலீடுகளை வசூலித்துள்ளனர்.
இதை நம்பி பலர் பல ஆயிம் கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி
யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார
குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரை சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.
இதையும் படியுங்கள் : இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி – திமுகவுக்கு நன்றி தெரிவித்து இமானுவேல் சேகரன் மகள் பிரபா ராணி பேட்டி!
இந்நிலையில், பல லட்சம் கொடுத்து பாதிக்கப்பட்ட எங்களையும், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து, சாட்சிகளாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். நியோ மேக்ஸ், நிறுவன மோசடி வழக்கு பல்வேறு மாவட்டங்களில் இடை தரகராக செயல்பட்ட நபர்களையும் கைது செய்து, அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







