’வடம்’ முதல் ’அனோமி’ வரை : இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவியூ…………!

இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோலிவுட்டில் இந்த வாரம் விமலின் ‘வடம்’, பாவனாவின் ‘அனோமி’, சதீஷின் ‘முஸ்தபா முஸ்தபா’, ரச்சிதாவின் ‘99/66’, நிவேதிதா சதீஷின் ‘ஓ பட்டர்பிளை’, விஜய் இயக்கத்தில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’, புதுமுகங்கள் நடிப்பில் ‘வசூல்மன்னன்’, ‘யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்’, ‘செல்லமடா நீ எனக்கு’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக………..!

வடம்

கேந்திரன். வி இயக்கத்தில் விமல், நட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கிராமத்து கதைக்களம் கொண்ட படம் தான் வடம். இப்படம் வட மாவட்டங்களில் நடக்கும் வடமஞ்சுவிரட்டு பின்ணனியில் உருவாகி இருக்கிறது. களத்தில் மாடுபிடிவீரர்களை பந்தாடும் பாண்டிமுனி என்ற வீரம் மிக்க, காளையை சுற்றி நடக்கும் கதை இது. கண்பார்வை சரியில்லாத அந்த காளையை தம்பி மாதிரி வளர்க்கிறார் விமல். பல போட்டிகளில் அது வெற்றி பெற, அதை தனக்கு தர வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறார் வில்லன் நட்டி. இதனால் இருக்கும் பகை வளர, அடுத்து என்ன நடக்கிறது என்பதே வடம் படத்தின் கதை.

கிராமத்து இளைஞன் வேடத்தில், காளையை பாசமாக வளர்க்கும் விதத்தில், சண்டைகாட்சிகளில் தனித்து தெரிகிறார் விமல். வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் நட்டி. பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்த முனிஸ்காந்த் இதில் குணசித்திர வேடத்தில் கலக்கியிருக்கிறார். அவருக்கான பிளாஷ்பேக் காட்சி உருக்கம். பாலசரவணனின் காமெடி பரவாயில்லை. புதுமுக ஹீரோயின் சனஷ்கா மனதில் நிற்கிறார். காளை சம்பந்தப்பட்ட காட்சிகள், மஞ்சு விரட்டு சீன்கள், சண்டைக்காட்சிகள் படத்தின் பிளஸ். விமல் ஏன் ஜெயிலுக்கு போனார் என்பது நல்ல டிவிஸ்ட். இமானின் இசையும், பாண்டிமுனி உள்ளிட்ட பாடல்களும் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றன. காதல் காட்சிகளில் ஈர்ப்பு குறைவு என்றாலும், எமோஷன் செட்டாகி இருக்கிறது. கிளைமாக்ஸ் பல படங்களில் பார்த்ததுதான். அதிகம் அறியப்படாத வடமஞ்சுவிரட்டு பின்னணியில், பகை, காதல், எமோஷன் கலந்த திரைக்கதையை மண் மணத்துடன் கொடுத்து இருக்கிறார். அதற்கு விமல், நட்டி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் தங்கள் நடிப்பால் பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

அனோமி

மலையாளத்தில் ரியாத்மாரத் இயக்கத்தில் வெளிவந்த மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான ’அனோமி’ அதே பெயரில் தமிழில் டப்பிங் ஆகி வந்துள்ளது. தடயவியல் நிபுணரான பாவனாவின் பாசத்தம்பி திடீரென மர்மமான முறையில் இறக்கிறார். அடுத்து அதே பாணியில் இன்னொரு இளைஞன், பெண் ஆகியோர் இறக்க, அது குறித்து பாவனா சந்தேகப்படுகிறார். டாக்டர்கள், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் என்ன இருக்கிறது என தீவிரமாக விசாரிக்க, சில அறிவியல் பூர்வமாக விஷயங்கள் அவருக்கு புரிகிறது. இது தற்கொலை அல்ல, கொலை என்று. குறிப்பாக, மனநலப்பாதிப்புக்கு ஆளாகி அதற்காக சிகிச்சை பெறுபவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற அதிரடி உண்மையை கோர்ட்டில் சொல்கிறார். இதனால் இந்த வழக்கை ஆரம்பத்தில் ஆர்வமின்றி விசாரிக்கும் ரகுமானுக்கும் பிரஷர் வருகிறது. அவர் மேலும் விசாரிக்க, பல அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. இப்படிப்பட்ட கொலைகளை செய்வது யார்? என்ன நோக்கம், அடுத்து நடக்க இருக்கும் கொலைகளை அவர் தடுத்தாரா? தனது தம்பி கொலைக்கு பாவனா பழிவாங்கினாரா என்பது அனாமி கிளைமாக்ஸ்.

பாவனாவின் நடிப்பும் , கொலைகள் குறித்து அவர் துப்பறிவதும், கிளைமாக்சில் கொலையாளிகளை நெருங்கி அவர் செய்யும் செயல்களும் பிரமாதம். தமிழ் படங்களில் ஹோம்லியாக பார்த்த பாவனாவா இது என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. ரகுமானும் இடைவேளைக்கு பின் சண்டைக்காட்சிகள் உட்பட பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மற்ற கேரகடர்களும் தங்களுக்கான வேலையை நிறைவாக செய்துள்ளனர். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை ஆகியவை கதைக்கு அவ்வளவு பலம். திரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களை இப்படம் நிச்சயம் ஈர்க்கும். மலையாள படங்களுக்கே உரிய திரில்லர் பாணியிலான கிளைமாக்ஸ் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, கடைசியில் வரும் டுவிஸ்ட் செம. மரணம், அடுத்து நடக்கும் விஷயங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை இந்த கதை எழுப்புகிறது. புதுமுக இயக்குனராக இருந்தாலும் ரியாஸ் மாரத் விறுவிறுப்பாக, இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் மெடிக்கல் திரில்லர் படத்தை கொடுத்துள்ளார். இந்த ஆண்டு வெளியாகியுள்ள படங்களில் ’அனாமி’ முக்கிய இடத்தை பிடிக்கும்.

99/66

பிளாட் ஒன்றின் 66ம் நம்பர் வீட்டுக்கு குடிவரும் ரச்சிதா மகாலட்சுமிக்கு, 99ம் நம்பர் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் நட்பு ஏற்படுகிறது. ஒரு நாள் அவர் கணவரால் கொலை செய்யப்படுவதாக கனவு காண்கிறார். இது குறித்து பிளாட் ஓனரிடம் சொல்லும்போது, 99ம் நம்பர் வீட்டில் வசித்தவர், என் மகள்தான். முன்பே அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை சொல்கிறார். ஸ்வேதாவுக்கு என்ன நடந்தது. ரச்சிதா உடலில் புகும் ஸ்வேதா ஆவி என்ன செய்கிறது,மகள் கொலைக்கு காரணமாக மருமகன், அவனது கூட்டாளியை அப்பா என்ன செய்தார், இதுதான் ’99/66’ படத்தின் மீதிக் கதை.

பேய் கதை என்றாலும் அப்பா, மகள் சென்டிமெண்ட், புத்தமத தத்துவம், சஸ்பென்ஸ் கலந்து வித்தியாசமான படத்தை கொடுத்து இருக்கிறார் எம்.எஸ்.மூர்த்தி. மேலும் அவரே ஸ்வேதாவின் அப்பாவாகவும் நடித்து இருக்கிறார். மகள் சாவுக்கு அவர் பழிவாங்க நினைப்பதும், கிளைமாக்சில் கருப்பசாமி பக்தர் வேடத்தில் அவர் செய்யும் செயல்களும் அருமை. ஹோம்லியாக நடித்துள்ள ரச்சிதா, பேய் உடலில் வந்தபின் மாறுவது ரசிக்க வைக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட சீன்களை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இன்னொரு ஹீரோயின் ஸ்வேதா கணவனால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வருகிறார். கௌரவ வேடத்தில் கே.ஆர்.விஜயா, தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓபனிங் விநாயகர் பாடலும், கிளைமாக்ஸ் பக்தி பாடலும் மனதில் நிற்கிறது. சேவிலோ ஒளிப்பதிவு படத்தை அழகாக்கி இருக்கிறது. பேய் சம்பவங்களை இன்னும் அதிகரித்து இருக்கலாம். திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவு என்றாலும் இப்படம் பெண்களை கவரும்.

முஸ்தபா முஸ்தபா

காமெடி நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்துள்ள படம் ’முஸ்தபா முஸ்தபா’. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யாதத்தாவுடன் சதீஷ் நெருக்கமாக இருக்கும் வீடியோ நெட்டில் வேகமாக பரவுகிறது. அதை நண்பர்கள் சுரேஷ்ரவி, கருணாகரன் உதவியுடன் அழிக்க பார்க்கிறார். அதில் வெற்றி பெற்றாரா? அந்த வீடியோவை வெளியிட்டது யார்? சதீஷ், ஹீரோயின் மோனிகா திருமணம் பிரச்னை இன்றி முடிந்ததா என்பது தான் ’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் கதை.

பிரவீன் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் அந்த வீடியோ சம்பந்தப்பட்ட சீன்கள், அதை அழிக்க நண்பர்கள் அலைவது, கடைசியில் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைவது ஆகியவை ரசிக்க வைக்கிறது. சதீஷ் மற்றும் மோனிகா காதல் காட்சிகள் செட்டாகவில்லை என்றாலும், நண்பர்களுடன் அவர் அடிக்கும் லுாட்டி, வீடியோவால் பதறுவது ஓகே. நண்பராக வரும் கருணாகரன் சீன்கள் கலகலப்பு. புகழ், சாம்ஸ் ஆகியோர் வரும் சீன்களில் இன்னும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். அந்த வீடியோவில் இருப்பவராக வரும் ஐஸ்வர்யாதத்தா, கருணாகரன் காதலியாக வரும் மகேஷ்வரி வரும் காட்சிகள் கலர்புல். வீடியோ ஏன் எடுக்கப்பட்டது, எப்படி பரவியது, அதை செய்தது யார் என்ற கோணம் படத்தின் பிளஸ். சுரேஷ்ரவி சம்பந்தப்பட்ட அந்த டுவிஸ்ட், அவர் கதை சொல்லும் பாணியும் புதுமை. காமெடி, கலகலப்பை அதிகரித்து இருந்தால் படத்தை இன்றும் நன்றாக ரசிக்கலாம்.

காதல் ரீசெட் ரிப்பீட்

விபத்து ஒன்றின் காரணமாக ஞாபக மறதியால் பாதிக்கப்படும் ஹீரோயின் ஜியா சங்கரை பத்திரமாக கவனிக்கிறார் புதுமுக ஹீரோ மதும்கேஸ். மதும்கேஸ் ஹீரோயினை காதலிக்க ஹீரோயினோ இசைக்கலைஞரான அர்ஜூனை காதலிக்கிறார். அவர்கள் காதலில் நடந்தது என்ன? ஜியா ஏன் ஸ்காட்லாந்து வந்தார்? அந்த விபத்து நடந்தது எப்படி? ஜியாவுக்கு ஞாபகங்கள் வந்ததா? மதும்கேஸ் காதல் என்னவானது, இதுதான் விஜய் இயக்கத்தில் உருவான காதல்ரீசெட் ரிப்பீட் படத்தின் கதை.

இசை சம்பந்தப்பட்ட படமான இதில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அது படத்தின் பெரிய பிளஸ். ஆனாலும், ஆங்காங்கே இளையராஜா டச்சிங் இருப்பதையும் மறுக்க முடியாது. ஹீரோயின் ஜியா அழகாக இருக்கிறார். அவர் நடிப்பு, எமோஷன், நான் யார் என்று கேட்டு பதறும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ரொம்பவே அமைதியாக இருக்கிறார் ஹீரோ மதும்கேஸ். இன்னொரு ஹீரோ அர்ஜூன் நடிப்பில் ஓவர் ஆக்டிங். ஸ்காட்லாந்தில் முக்கியமான கேரக்டராக வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். வழக்கமான முக்கோண காதல் என்றாலும், கிளைமாக்சில் ஒரு விஷயம் இருக்கிறது. முதற்பாதி சுமார், இரண்டாம்பாதி இன்னும் சுமார்.

ஓ பட்டர்பிளை

புதுமண தம்பதிகளான அதுல் மற்றும் நிவேதிதா சதீஷ் ஆகியோர் ஒரு மலைவாழ் கிராம வீட்டில் இருக்கிறார்கள். திடீரென அந்த வீட்டுக்கு நிவேதிதாவிப் முன்னாள் காதலரான சிபி வருகிறார். அவர் அதுலின் நண்பரும் கூட. இந்த மூன்று கேரக்டர்களுக்குள்ளும் நடக்கும் உரையாடல்கள், உறவுசிக்கல்கள், பிரச்னைகள், சண்டை, ஒரு மரணம் ஆகியவை தான் ஓ பட்டர்பிளை படத்தின் கதை.

விஜய் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தை உளவியல்ரீதியிலான, வாழ்க்கையின் ஓட்டத்தை பேசும் ஒரு வித திரில்லர் படம் எனலாம். ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் முன்னாள் காதலன் என தவிக்கிற இடங்களில் நிவேதிதா நடிப்பும், அவரின் கோபம், பதட்டமும் பிரமாதம். பல குளோசப் ஷாட்களில் அவர் முகபாவம், கண்கள் நடிப்பு நச். வேலை போனதால் தவிக்கும் கணவராக, கொஞ்சம் எமோஷனல் பார்ட்டியாக வருகிறார் அதுல். நிவேதிதா, சிபி பற்றி உண்மை அறிந்து செய்யும் செயல்கள் பரபரப்பு. நல்லவனா? கெட்டவனா என்று சொல்ல முடியாத கேரக்டரில் சிபியும் சிறப்பாக நடித்து இருக்கிறார். அந்த வீட்டில் சமையல்காரராக வரும் நாசர், தனக்கே உரிய பண்பட்ட நடிப்பை தந்து இருக்கிறார். அவர் பட்டர்பிளை மீது வைத்திருக்கும் பாசம், அதை தேடி அலையும் சீன்கள் அருமை. ஹீரோயின் அக்காவாக வரும் லட்சுமிபிரியா, கை பார்த்து எதிர்காலம் சொல்லும் கீதாகைலாசம் கேரக்டர் பின்னணியும் ஓகே. யார் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்ற விஷயம் நல்ல திரைக்கதை. படத்தில் அதிக டயலாக் இருக்கிறது. ஒவ்வொரு சீனிலும் கதையோடு ஒட்டிய ஆழமான பின்னணி இருக்கிறது. நிறைய தத்துவங்கள் பேசப்படுகிறது. ஒரு மாறுபட்ட கோணத்தில் நிறைய விஷயங்களை மறைமுகமாக சொல்லி கதையை நகர்த்துகிறார் இயக்குனர். ஒவ்வொரு செயல்களுக்கும், ஒவ்வொரு மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை சீன்கள், கேரக்டர்கள் மூலமாக சொல்கிறார். மனித எண்ணங்கள், உணர்ச்சி மனநிலை, வாழ்க்கையின் போக்கு, உளவியல் பிரச்னைகள் என பல விஷயங்களை படம் பேசுகிறது. கொஞ்சம் பொறுமையாக ரசிக்கிற மனநிலை இருந்தால் இந்த படத்தை ரசிக்கலாம்.

வசூல் மன்னன்

வேல.குமரேசன் இயக்கத்தில் ‘சிறகடிக்க ஆசை’ஸ்ரீதேவா, நிவேதா, வேல.ராமமூர்த்தி, சரவண சக்தி ஆகியோர் நடித்துள்ள படம் ’வசூல் மன்னன்’. தங்கை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயத்துக்காக பலரிடம் கடன் வாங்கிவிட்டு, ஆனால், ஜாலியாக சுற்றி திரிகிறார் ஹீரோ ஸ்ரீதேவா. போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்படும் ஹீரோயின் நிவேதா அவரிடம் ஏமாறுகிறார். அவர் தந்தை வேல.ராமமூர்த்தியோ வட்டிக்கு பணம் கொடுக்கும் வில்லன். இவர்களின் சிக்கிய ஹீரோ நிலை என்ன ஆனது. பிரச்னைகளை மீறி, நிவேதாவை அவர் எப்படி திருமணம் செய்தார். தனது கடனை எப்படி தீர்த்தார் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கடன் வாங்கிவிட்டு தவிக்கும், மற்றவர்களை ஏமாற்றும் கேரக்டர் ஸ்ரீதேவா நடிப்பு ஓகே. புதுமுகம் என்றாலும் பிரஷ் ஆக, உற்சாகமாக நடித்து இருக்கிறார் நிவேதா. வழக்கமான வில்லத்தனம் காண்பித்து இருக்கிறார் வேல.ராமமூர்த்தி. கடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காதல் காட்சிகள், ஹீரோ, தங்கை சம்பந்தப்பட்ட எமோஷன் காட்சிகள் ஓரளவு பரவாயில்லை. ஹீரோயினை காதல் திருமணம் செய்துவிட்டு, ஹீரோ செய்கிற செயல்கள் விறுவிறுப்பு. சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படம் என்றாலும் காமெடிக்காக படத்தை ரசிக்கலாம்.

ஆனந்த் சிவம் இயக்கியுள்ள ‘செல்லமடா நீ எனக்கு’ படம் தாய்பாசத்தை விவரிக்கிறது. இப்படத்தில் வசீகரன், நேகா, செந்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

பால்ராஜ் இயக்கி, நடித்து வெளியாகியுள்ள ‘யார்ரா அந்த பையன், நான்தான் அந்த பையன்’ படம் மது பிரச்னை மற்றும் குழந்தை வளர்ப்பின் கஷ்டத்தை பேசுகிறது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.