கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் நாளையிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதுவரை 48,336 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 713 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை செயலர், சுகாதார செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின் லாஸ்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாகவும், மேலும் காலை 5 முதல் மாலை 5 வரை மட்டுமே கடற்கரை திறந்து இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும் உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து உன்ன அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், ஆக்சிஜன் உடன் உள்ள படுக்கைகள், அவசரக் கால மருந்துகள் அனைத்து இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனத் தெரிவித்தார்.
திருமண விழாக்களில் 100 நபர்களும், இறுதி சடங்கில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மக்கள் அதிகம் கூடுவதால் சந்தைகளை விசாலமான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர் வழிபாட்டு தளங்கள் குறித்து அனைத்து மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பான்லே பாலகங்கள் மூலமாக குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.







