காவிரி முதல் நீட் வரை தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய்!

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியனார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரள மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே. ஜோஷி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்க்கா, லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் பிரஃபுல் படேல், தென் மண்டலக் குழுவைச் சேர்ந்த மாநிலங்களின் அமைச்சர் பெருமக்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், ஒன்றிய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள்தான் முக்கியப் பங்களிப்பு தரும் இயந்திரம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டும் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.

மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது. தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை. கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். மாநிலங்களுக்கு இடையேயான உளவுத் தகவல்களைப் பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிப்போம். போதைப்பொருள்களின் ஆன்லைன் விற்பனையைத் தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள் இணைந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். 12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவச் சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள், சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சினையை அணுக வேண்டும்.

கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க வேண்டும். வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கான நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். சிறப்பு சலுகை கேட்கவில்லை; நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே கேட்கிறோம்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.