அதிமுக பொதுக்குழு என்றாலே சுவாரசியங்களுக்கும், சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுக்களை பற்றி காண்போம்.
அண்ணாவை போலே ஜனநாயக ரீதியில் எம்ஜிஆரும் கட்சியை நடத்தினார் என்றால் சற்றும் மிகையில்லை. அண்ணா நெடுஞ்செழியனிடம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஒப்படைத்தது போல், எம்ஜிஆர் அதிமுகவை துவக்கி, முதலமைச்சரான பின், ஆட்சிப்பணிக்கும், அரசுப்பணிக்கும் அதிக நேரம் தேவைப்படுவதாக கூறினார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியனிடமும், பின்னர் ப.உ.சண்முகம் மற்றும் ராகவானந்தத்திடமும் ஒப்படைத்தார். இந்த ஜனநாயக சாதனைகளை எல்லாம் அவர் பொதுக்குழுவின் ஒப்புதலுடனே செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1980 ஆம் ஆண்டுகளில், ஒரிசா முதலமைச்சர் பிஜூ பட்நாயக்கின் சமரச முயற்சியின் படி திமுகவும், அதிமுகவும், ஒன்றிணைவது, முதலமைச்சராக எம்ஜிஆர் தொடர்வார், கட்சியின் தலைவராக மு.கருணாநிதி இருப்பார் என முடிவானது. இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்க அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டினார் எம்ஜிஆர். பொதுக்குழுவில் பேசிய நிர்வாகிகள் திமுகவோடு அதிமுக இணைந்தால் பாதகங்களே அதிகம் என்றனர். அதை ஏற்ற எம்ஜிஆர், அதிமுக தனித்தே இயங்கும் என்று அறிவித்தார்.
எம்ஜிஆரின் மறைவுக்கு பின் அதிமுக, ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்து 28 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஜெயலலிதா தமிழ்நாடு சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இதையடுத்து ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவை அதிமுகவின் தலைமையை ஏற்கும் படி கேட்டுக் கொண்டார். பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றார். அதிமுகவும் படுதோல்வியடைந்தது. 1996 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியான திமுக, ஜெயலலிதா மீதும், அவரின் அமைச்சரவை சகாக்களின் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகளை தொடர்ந்தது.
அப்போது ஜெயலலிதாவுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் தலைமையில் முத்துசாமி உள்ளிட்ட சிலர் தனியாக பொதுக்குழு ஒன்று கூட்டி எங்கள் அணி தான் உண்மையான அதிமுக எனவும் சில காலம் கூறி வந்தனர். ஆனாலும், அதிமுகவில் பெரும்பாலோனார் வென்றாலும், தோற்றாலும் ஜெயலலிதாவுக்கு துணை நிற்போம் என உறுதியாக இருந்தனர்.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி பொதுக்குழு கேட்டுக்கொண்டதால் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பெற்றார் சசிகலா.
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் -பொதுச்செயலாளர் சசிகலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2017 ஆம் ஆண்டு , முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்தது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். சசிகலா சிறை செல்லும் முன் டிடிவி தினகரனை அதிமுக வின் துணைப்பொதுச்செயலாளராக அறிவித்தார்.
தனி அணியாக சென்ற ஓ.பன்னீர்செல்வம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இடையே இணக்கம் உருவானதால், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். துணை முதலமைச்சராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். அதையடுத்து 2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரனையும் நீக்கினர். ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர்
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 2021 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டப்பேரவை தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு பின் சட்டப்பேரவை அதிமுக குழுத்தலைவராகவும், எதிர்க்கட்சித்தலைவராகவும் தன்னை நிலை நிறுத்தி கொண்டார். அதிமுக தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அதற்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்க வேண்டும். அதற்காக இன்றைய பொதுக்குழுவின் மூலம் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம் என நினைத்தார் எடப்பாடி.
ஆனால் ஓ.பன்னீர் செல்வமோ , ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி விட்டு, பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டால் அரசியலில் தனக்கு முக்கியத்துவம் குறைந்து விடும். அதிமுக முழுமையாக எடப்பாடி கையில் சென்று விடும் என்பதால் , கடைசி வரை காவல் துறை, நீதி மன்றம் என் போராடி இன்றைய பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி குறித்து குறிப்பிடப்படாத , இதர 23 தீர்மானங்கள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பெற்றார். இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த தற்காலிக நிவாரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இனி என்ன நடக்கும் என்ற கேள்விக்கு ,இன்றைய பொதுக்குழுவில் விடை கிடைக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.