செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா நகர், செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் அமைந்தகரையைச் சேர்ந்த குமரன் என்பவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் உணவருந்தச் சென்றுள்ளார். அப்போது, சிக்கன் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆடர் செய்த சிக்கன் பிரைடு ரைஸ் வந்தவுடன் தனது நண்பர்களுடன் அதைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். அப்போது அதில் கண்ணாடி துகள்கள் இருந்ததைக் கண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.9,85,300 அபராதம் விதிப்பு!’
அதனைத்தொடர்ந்து, உடனே ஹோட்டலின் கிளை மேலாளரை அழைத்து புகார் தெரிவித்ததும் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவை அங்கிருந்த ஊழியர்கள் அப்புறப்படுத்தி குப்பைத்தொட்டியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பிரபல ஹோட்டலின் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவல்களும் சரிவரத் தெரிவிக்காத நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குமரன் என்ற நபர் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த உணவகமே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.








