கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 83 லட்சம் மோசடி செய்ததாக அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. அதிமுக ஒன்றியச் செயலர். நல்ல தம்பியின் அண்ணன் ரவிச்சந்திரன் அதிமுகவின் விருதுநகர் மாவட்ட கிழக்கு மாவட்டச்செயலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வள்ளி கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் கடந்த 2016 முதல் 2019 வரை துணைவேந்தராகப் பணியாற்றி வந்து உள்ளார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.மனோகரிடம் நல்லதம்பி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக எனது அண்ணி வள்ளி பணியாற்றிய போது பலருக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சத்தை நான் கூறியதன் பேரில் எனது சகோதரர் ரவிச்சந்திரனிடம் கொடைக்கானலைச் சேர்ந்த விஜய் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியது போல் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. பெற்ற பணத்தையும் திருப்பிக்கொடுக்க வில்லை.
இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் தனக்கு நெருக்கடி கொடுத்ததை அடுத்து எனது சகோதரர் ரவிச்சந்திரன் முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதம் உள்ள பணத்தை தேர்தல் முடிந்த உடன் தருவதாக தெரிவித்தார். ஆனால் கூறிய படி தேர்தல் முடிந்தவுடன் பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் வேலையும் வாங்கி கொடுக்காமல் வேலைக்காக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய சகோதரர் ரவிச்சந்திரன் மீதும், அண்ணி வள்ளி மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அவரின் மனைவி மீது உடன் பிறந்த சகோதரர் பண மோசடி புகார் அளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.







