நடிகர் அஜித்குமார், தனது ரசிகர் மன்றம் மூலமாக வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அடுத்த கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ராஜேஸ்வரி. தீவிர அஜித் ரசிகரான ஐயப்பனிடம், திருநெல்வேலி மாவட்டம் தாளையத்து பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், தனக்கு அஜித்தின் மேலாளரை நன்றாக தெரியும், அவர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் நடிகர் அஜித், கஷ்டப்படும் தன்னுடைய ரசிகர்களை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து, 15 லட்சம் ரூபாய் செலவில் அஜித் ரசிகர் மன்றம் மூலமாக அவர்களுக்கு வீடு கட்டித் தருகிறார் என்று ஐயப்பனிடம் கூறிய சிவா, முதலில் பத்திரப் பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் வீடு கட்டுவதற்கான தொகை ரூ.15 லட்சம், பத்திரப்பதிவிற்கான தொகை ஒரு லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம், உங்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும் என்றும் ஆசைவார்த்தி கூறி ஏமாற்றியுள்ளார்.
ஐயப்பனை உறுதிபட நம்ப வைப்பதற்கும், அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும், நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரைப் போலியாக தயார் செய்து, ஐயப்பனிடம் பேசச் செய்துள்ளார். மேலும் இருபது ரூபாய் போலி பத்திரத்தில் ஐயப்பனிடம் இருந்து கையெழுத்து பெற்றுக் கொண்ட சிவா, தொடர்ந்து சிறிய சிறிய தொகையாக, ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். பின்னர் தாங்கள் ஏமாற்றபட்டதை உணர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி, இதுகுறித்து சிவாவிடம் கேட்டதற்கு, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐயப்பன் மனைவி ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். அஜித் ரசிகரிடமே நடிகர் அஜித் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.