கேரளாவைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், நகைகளைத் திருப்பித் தரும்படி தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்ததால், கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று கோடி ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு தன்னை மிரட்டி வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இன்னும் தரவேண்டிய பணம் மற்றும் நகையை திருப்பி தரவேண்டும் என்று கேட்டால், பொய் வழக்குகள் போட்டு தமிழகத்திற்குள் வர விடாமல் செய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு குறித்து, விஜய பாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேற்று ஆஜரானார். காலை 11 மணியில் இருந்து மாலை வரை அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர், இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தன் மீது பொய் புகார் அளித்த ஷர்மிளா மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.








