ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்திற்கு 550 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்ததாக முன்னாள் காவல்துறை அதிகாரி ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த என்எல்எஸ் ஐஎஃப்எஸ் எனும் நிதி நிறுவனமானது வாடிக்கையாளர்களிடம் 10% வரையில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டனர். இந்த நிறுவனம் சுமார் 84,000 ஆயிரம் பேரிடம் இருந்து 5,900 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த 21 பேர் வழக்கு பதியப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ரூ.1.14 கோடி ரொக்கம், 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.121 கோடி பணம், ரூ.39 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள், 18 கார்கள் ஆகியவற்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர வெளிநாட்டு பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி நிறுவனத்தின் 4 முக்கிய இயக்குனர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. இவர் காவல் பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்றவர். இவர் முகவராக இருந்து சுமார் 2000 பேரிடம் பணம் வசூல் செய்துள்ளார். இவர் மூலமாக மட்டும் சுமார் 550 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.







