பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் படத்தில் நடித்திருந்த சாந்தினி புகார் அளித்திருந்தார். அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால், தாம் மூன்று முறை கருவுற்றதாகவும் மணிகண்டன் தம்மை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுதாக்கல் செய்திருந்தார். முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவானார். பின்னர் அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.’பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் புகாரில் கூறிய குற்றசாட்டுகள் உண்மையில்லை என்றும் மணிகண்டன் தரப்பில்பு நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
’விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது’ என்றும் கூறிய நீதிபதி செல்வக்குமர், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







