மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற போலி தடுப்பூசி முகாமில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தொடரச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற போலி தடுப்பூசி முகாமில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு மருந்துக்கு பதிலாக உப்பு நீரை பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மேசடி பணம் ரூ.12.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் நடத்திய மேலும் புதிய 8 தடுப்பூசி முகாம்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் 60 லட்சம் கொரோனா தொற்றாளர்களுடன் மகாராஷ்டிரா இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது. தற்போது 1.24 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 57 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அதே போல 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







