தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு அமைச்சரவை மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 43 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார்.
எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானதை அடுத்து, தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உட்பட சிலருடைய பெயர்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, புதிய தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலையை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்







