முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி சிங். உத்தரபிர தேசத்தை சேர்ந்த இவர், பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவருடைய தந்தை சிவபிரசாத் சிங், கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை ஆர்.பி.சிங், சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘எனது தந்தை சிவபிரசாத் சிங் காலமாகிவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 12 ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சுரேஷ் ரெய்னா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரக்யான் ஓஜா, ரமேஷ் பொவார், தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் உள்பட பலர் சமூக வலைதளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது.







