முக்கியச் செய்திகள் கட்டுரைகள் செய்திகள் விளையாட்டு

தகர்க்க முடியாத தடுப்புச் ‘சுவர்’ ராகுல் டிராவிட் பிறந்தநாள் இன்று!


தென்றல் பிரபாகரன்

கட்டுரையாளர்

2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி அது. முதல் ரன்னை பதிவு செய்த அந்த பேட்ஸ்மேனுக்கு சதமடித்தது போன்ற வரவேற்பை கொடுத்தனர் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள். இந்த பாராட்டுகளுக்கு காரணம் அந்த ஒரு ரன் அல்ல, அதற்கு முன்பாக 40 பந்துகளை சந்தித்து எந்த ரன்னுமே எடுக்காமல் டெஸ்ட் போட்டியின் அடிநாதத்தில் அச்சாரமிட்டு அமர்ந்திருந்த அந்த பேட்ஸ்மேனின் திறமைக்கு தான். அவர்தான், `WALL OF INDIAN CRICKET’ என அழைக்கப்படும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

1973-ம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தவர் டிராவிட். அவர் சிறுவயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தது. 12 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் ராகுல் டிராவிட், 15 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக அணியில் இடம்பிடித்து ஒரு பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் தன்னை பட்டை தீட்டிக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1991ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் கால்பதித்த அவர், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 82 ரன்களை குவித்து கவனத்தை ஈர்த்தார். உள்ளூர் போட்டிகளில் முத்திரை பதித்த டிராவிட்டை ரத்தின கம்பளத்துடன் வரவேற்றது இந்திய ஏ அணி. சிறப்பான பார்ஃமில் இருந்த அவர், 1996ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச போட்டியில் களம் கண்டார். அதே ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் ராகுல் டிராவிட்.

23 வயது இளைஞனாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான டிராவிட்டிற்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற அசைக்க முடியாத சாதனைக்கு தாம் சொந்தக்காரர் ஆகப்போகிறோம் என்று. ஒட்டுமொத்தமாக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட், களத்தில் சந்தித்த மொத்த பந்துகளின் எண்ணிக்கை 31,258. உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் 30 ஆயிரம் பந்துகளை சந்தித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. அதுமட்டுமின்றி களத்தில் அதிக நேரம் விளையாடிய வீரர் என்ற சாதனையும் இவரையே சாரும். டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்ஸ்மேனாக மைதானத்தில் இருந்த நேரம் 44,152 நிமிடங்கள் ஆகும்.

டெஸ்டில் அதிக கேட்சுகளை (210) பிடித்தவர், தொடர்ச்சியாக 4 இன்னிங்சில் சதம் அடித்த இந்திய வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என ராகுல் டிராவிட்டின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

களத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர், எதிரணி பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதிப்பதில் வல்லவர். “டிராவிட் களமிறங்கிய 15 நிமிடத்திற்குள் அவரை அவுட்டாக்க வேண்டும், அது முடியாவிட்டால் அந்த பக்கம் இருக்கும் மற்ற வீரர்களையே பெவிலியனுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்”. இந்த வார்த்தைகளை கூறியது ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ஸ்டீவ் வாக்.

“டிராவிட்டால் என்னை போன்று அதிரடியாக விளையாட முடியும், ஆனால் அவரை போன்று நிதானமான ஆட்டத்தை என்னால் வெளிப்படுத்த முடியாது” என கூறியவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில்.உலகம் கொண்டாடும் வீரர்கள் டிராவிட்டை கொண்டாடியதையே அவரது திறமைக்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.

ஆகச்சிறந்த பொறுமைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய ராகுல் டிராவிட்டை 2007-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக்கி அழகு பார்த்தது பிசிசிஐ. 2011-ம் ஆண்டு தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியை விளையாடிய ராகுல் டிராவிட், டெஸ்ட் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்து ரசிகர்களை கண்ணீரில் மிதக்கவிட்டார்.

509 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர், 24,208 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 270 ரன்கள் எடுத்ததே டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

ஓய்வை அறிவித்தாலும் கிரிக்கெட் மீதான தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்தார் டிராவிட். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய அவர், முதன்மையான இந்திய அணிக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பொறுப்பை கையில் எடுத்தார்.

அசாத்திய திறமை, அனுபவம் என இரண்டையும் கரைத்து குடித்த இந்த ஜாம்பவனுக்கு மற்றொரு மகுடத்தை சூடியது பிசிசிஐ.  அதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு. அடுத்தடுத்த கேப்டன்கள் மாற்றத்தால் தடுமாறும் இந்திய கிரிக்கெட் அணி என்ற கப்பலை, பொறுமையின் சிகரமாக விளங்கும் ராகுல் டிராவிட் நிச்சயமாக நல்ல நிலைக்கு கொண்டு சேர்ப்பார் என்பதை உறுதியாக கூறலாம்.

தென்றல் பிரபாகரன் –  நியூஸ் 7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி

Jayasheeba

நிலவை தொட்ட முதல் மனிதன்

EZHILARASAN D