தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் சென்ற ஆண்டு இதே நாளில் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் சென்ற ஆண்டு இதே நாளில் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கான பணி ஆணைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார். இந்நிலையில், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தினர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், 2000 ஆண்டு கருவறை தீண்டாமை இருள் நீக்கி ஓராண்டு நிறைவு ஆகிறது எனவும், பெரியார், மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதிக்கும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், பணி நியமன ஆணைகள் வழங்கி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியாற்றி வரும் நிலையிலும் பல சிக்கல்கள் தற்போது வரை நீடித்து வருகிறது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும், பாஜகவினரும், பார்ப்பனர்களும் தொடர்ந்து இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து, இதற்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், 130-க்கும் மேற்பட்டோர் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று பணிநியமன ஆணை பெறாமல் உள்ளதாகத் தெரிவித்த அவர், வயது வரம்பைக் காரணம் காட்டி இன்று வரை பணிநியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.