ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 13 பேர் உயிரிழப்பு!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்று ஜப்பான். இந்த நாடு பசிபிக் ‘நெருப்பு வளையத்தின்’ மேற்கு விளிம்பில் உள்ள நான்கு முக்கிய புவித்தட்டுக்களின் மீது அமைந்துள்ளது இதற்கு காரணமாகும். இந்த நிலையில் நேற்று தெற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1- ஆக பதிவாகியுள்ளதாகவும் இதன் மையப்புள்ளி கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. மேலும், பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ மற்றும் அண்டை மாகாணமான நாகசாகியில் வசிக்கும் சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.