“முதல் தொண்டனாக செயல்படுவேன்”- அன்புமணி

முதல் தொண்டனாக செயல்படுவேன் என பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் பேசினார்.  சென்னை திருவேற்காட்ட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி…

முதல் தொண்டனாக செயல்படுவேன் என பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் பேசினார். 

சென்னை திருவேற்காட்ட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கபட்டார்.

பாமகவின் புதிய தலைவராக பதவி ஏற்றவுடன் அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசினார். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை எனக்கு மருத்துவர் அய்யாவும், நீங்களும் சேர்ந்து வழங்கி இருக்கிறீர்கள். 43 ஆண்டு காலமாக நம் கட்சியையும் மற்ற இயக்கங்களையும் நடத்தி வந்த மருத்துவர் அய்யாவின் கொள்கைகளை நான் பின்பற்றுவேன் என நான் உறுதி கூறுகிறேன்.

தொண்டர்கள் இல்லை என்றால் நம் கட்சியே கிடையாது! கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது கண்டிப்பாக உங்களுடன் நடக்கும். உங்களிடம் நான் கட்சியின் தலைவராக செயல்பட மாட்டேன். முதல் தொண்டனாக செயல்படுவேன். தோளோடு தோள் நின்று செயல்படுவேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு தமிழகத்தை முன்னேற்றுவது. அதில் ஆட்சி அதிகாரம் இருந்தால் மிக சிறந்த முறையில் முன்னேற்றலாம். ஆட்சி, அதிகாரம் கிடைப்பதற்கு முன்பே மிக சிறப்பாக செயல்பட்ட கட்சி பாமக. இனி பாமக 2.0 என்ற திட்டத்தின் மூலம் நாம் சிறப்பாக செயல்படுவோம்.

நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று, அப்பணியில் நான் சிறப்பாக செயல்பட்டதாக எண்ணுகிறேன். இந்த பொறுப்பிலும் சிறப்பாக செயல்படுத்துவேன். உங்களிடமும் அதனை எதிர்பார்க்கிறேன். இதற்கு முன்பு எப்படி இருந்தீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இனி 100 விழுக்காடு கட்ட பஞ்சாயத்து, ரவுடீசம் என எதுவும் என்னுடைய தலைமையில் இருக்க கூடாது. இருக்கவும் விட மாட்டேன்.

விவசாயத்தை பாதிக்காமல் தொழிற்சாலைகளை உருவாக்குவது தான் வளர்ச்சி. தமிழகத்தை ஆட்சி செய்ய திறமையும், தகுதியும் உடைய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழகத்தில் மோனோ ரயில் திட்டத்தை நிறுத்தி, மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர செய்தது பாமக தான்.

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் உள்ளிட்டவற்றை தடுத்தது, 48 மணல் குவாரிகளை மூட செய்தது, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசை தடுத்து நிறுத்தியது உள்ளிட்டவை முதல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில், தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க செய்தது, தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது, சிபிஎஸ்சி பாடங்களில் நாடார்களை பற்றி இழிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது, சட்டப்போராட்டம் நடத்தி எதிர்த்தது என பல்வேறு சாதனைகள் புரிந்து உள்ளோம்.

பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையிலே மது பாட்டில்களை வைத்து கொண்டு குடிப்பது நம்மால் பார்க்க முடிகிறது, தமிழ்நாட்டில் இந்த நிலைக்கு சீரழிவை ஏற்படுத்தியது திராவிட ஆட்சி. மேலும் அனைவரும் தமிழகத்தை பீகார் மாநிலத்துடன் ஒப்பிடுகிறார்கள். நாம் தமிழகத்தை சிங்கப்பூர் உடன் ஒப்பீடு செய்கிறோம்.

ஆட்சிக்கு வந்து நாங்கள் போடுகிற முதல் கையெழுத்து, பூரண மது விலக்கு, இதை செய்ய எந்த கட்சிக்கும் ஒரு துளி தைரியம் கூட கிடையாது. பாமக இலக்கை அடைய கடுமையாக நான் பாடுபடுவேன், நேர்மையாக செயல்படுவேன், அர்ப்பணிப்போடு செயல் படுவேன், தோளோடு தோள் நின்று அடி தொண்டனாக செயல்படுவேன் என அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.