புதுப்பிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கார்! புகைப்படம் எடுத்து மகிழும் பொதுமக்கள்!!

“கறை’ படியாத கைக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்ற காமராஜர் பயன்படுத்திய கார் நீண்ட காலம் பராமரிப்பின்றி கறை படிந்து சிதிலமடையும் நிலையில் இருந்தது. இதற்காக பலரும் குரல் எழுப்பிய நிலையில் தற்போது இந்த…

“கறை’ படியாத கைக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்ற காமராஜர் பயன்படுத்திய கார் நீண்ட காலம் பராமரிப்பின்றி கறை படிந்து சிதிலமடையும் நிலையில் இருந்தது. இதற்காக பலரும் குரல் எழுப்பிய நிலையில் தற்போது இந்த கார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு….

சுதந்திர போராட்ட களத்தில் இருந்து உருவான மக்கள் தொண்டன்… காங்கிரஸ் கண்டெடுத்த ஆற்றல்மிகு செயல்வீரர்… தமிழகத்தில் உருவான மகத்தான மக்கள் தலைவர்… தமிழக முதல்வராக 9 ஆண்டுகள் பயணித்து பொற்கால ஆட்சியை தந்தவர்… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் நமக்கு கல்வி தந்த கர்ம வீரர் காமராஜரைப் பற்றி… “கறை’ படியாத கைக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்ற இந்த மாமேதை பயன்படுத்திய கார் “கறை’ படிந்து, பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் நிலையில் பரிதாபமாக இருந்தது.

எம்.டி.டி. 2727′ என்ற எண் கொண்ட இந்த கறுப்பு நிற “செவர்லட்’ கார், தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரால் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சிப் பணியாற்றினார் காமராஜர்.

1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகு, அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல் தனது செவர்லட் காரிலேயே தமிழகம் முழுவதும் பயணிது பாமர மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் காமராஜர். தான் பெறாத கல்வியறிவை தமது மக்கள் பெறவேண்டும் என்று எண்ணிஇலவசக் கல்வி, மதிய உணவு மற்றும் சீருடை போன்ற எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இலவசக் கல்வியும், உணவும் மட்டுமே போதாது என்று நினைத்த காமராஜர், அதற்காக கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை நிறுவி, மக்களிடையே கல்வியை வளர்த்தார்.

இதுமட்டுமின்றி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான அணைகளை கட்டினார். தொழிற்சாலைகள், சிமென்ட் ஆலைகள் என பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தனது 9 ஆண்டுகால ஆட்சியின் போது செயல்படுத்தி வெற்றி கண்டார்.

1963ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட்ட போதும் இதே காரில்தான் தமிழகத்தை வலம் வந்தார் காமராஜர். பின்பு இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரûஸ ஏற்படுத்தி, அதை வலுப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின்போதும் இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். அதன்பின்பு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த காமராஜர், 1975 அக்டோபர் 2-ம் தேதி இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்.

அவருக்கு பிறகு பி. ராமச்சந்திரன் தலைமையில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரûஸ கட்சியை நிர்வகித்தனர். அப்போது கட்சியை நடத்த பணம் இல்லாமல் காமராஜர் தனது வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் விற்பனை செய்தது மட்டுமின்றி, இறுதியில் காமராஜர் பயன்படுத்திய காரையும் விற்பனை செய்ய முடிவு எடுத்து, அதனை சென்னையைச் சேர்ந்த காப்பித் தூள் வியாபாரி சோமசுந்தர நாடார் என்பவரிடம் 2 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று விற்றனர்.

இதனை தொடர்ந்து காமராஜரின் கார் விற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கவிஞர் கண்ணதாசன், “கார்முகில்வண்ணன் கண்ணபிரான் ஏறிய தேரில், காப்பித் தூள் கடைக்காரரா..!’ என்று தான் நடத்தி வந்த தென்றல் பத்திரிகையில் கவிதை ஒன்றை எழுத, சேலத்தில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் கண்ணதாசனின் கவிதையை பத்திரிகையில் படித்து பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே, சோமசுந்தர நாடாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காரை சத்தியமூர்த்தி பவனில் கொண்டுபோய் நிறுத்திவிடுங்கள். நாங்கள் சென்னை வந்ததும் நீங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சோமசுந்தர நாடாரும், அவர்கள் கூறியபடியே காரை சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைத்தார். அன்றைய தினம் சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் காரை மீட்க கட்சித் தொண்டர்களிடம் துண்டு ஏந்தி நிதி திரட்டி, ராமச்சந்திரனும், குமரி ஆனந்தனும் சென்னை திரும்பியதும் சோமசுந்தர நாடாரிடம் பணத்தை கொடுத்து காரை மீட்டனர்.

இதன் பிறகு கூண்டுக்குள் கிளையை அடைத்து வைப்பது போன்று கட்சியை நடத்த நிதியில்லாமல் காப்பித் தூள் கடைக்காரர் வரை சென்று பல இன்னல்களை சந்தித்த காமராஜரின் கார் இன்றும் அவரது நினைவாக சென்னை காமராஜர்அரங்கத்தின் பின் பக்க நுழைவாயில் அருகே பரிதாபமான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காரை நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள அறை முழுவதும் பாழடைந்து, தூசி படிந்து சிதிலடமடைந்த நிலையில் காணப்பட்டது.

காரில் கை வைத்தால் விரல் அப்படியே பதியும் அளவுக்கு தூசி படிந்து, காரின் சக்கரங்களும் பராமரிப்பின்றி கட்டைகளை வைத்து முட்டு கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட பலரும் நிதி பற்றாக்குறையா? வருடம் முழுவதும் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகள் காமராஜர் அரங்கில் நடைபெறும் நிலையில், காரை பராமரிக்க நிதி இல்லை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை… ஏன் ஒரு மாமனிதர் பயன்படுத்திய காரை கூட சரியாக காங்கிரஸ் கட்சியினரால் பராமரிக்க முடியவில்லை.. காரைபராமரிப்பது எப்படி என்று சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் சென்று அவரது காரை ஒரு முறையாவது பார்த்து வந்தால் விடை கிடைக்கும் என்றும் பலவாறு விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.

இந்த நிலையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி முயற்சியின் பெயரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயன்படுத்திய கார், கிருஷ்ணகிரி மெக்கானிக் ஷெட்டில் புனரமைக்கப்பட்டது. வரும் ஜூலை 15-ஆம் தேதி அன்று கர்ம வீரரின் 121-வைத்து பிறந்த நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதோடு காமராஜர் மறைவுக்குப்பின், சென்னை காமராஜர் அரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த காரும், கிருஷ்ணகிரியில் உள்ள டார்க் மேக்ஸ் என்ற கார் மெக்கானிக் ஷெட்டில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கார் ஷெட் உரிமையாளர் அஷ்வின் ராஜ் வர்மா கூறியதாவது: என் தாத்தா முனுசாமி கவுண்டர் காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். என் தந்தை ராஜேந்திர வர்மா தனியார் பஸ்கள் வைத்து தொழில் நடத்துகிறார். நான் கிருஷ்ணகிரியில் கார்ஷெட் வைத்துள்ளேன். நாங்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி என்னிடம், காமராஜரின் காரை புதுப்பித்து தருமாறு கேட்டார். அதன்படி கடந்த, ஜூன், 1ல், காரை சென்னை காமராஜர் அரங்கத்திலிருந்து எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம்.

கார் கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் அமெரிக்காவில் ஆர்டர் செய்து வரவழைத்தோம். அதேபோல சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களை புனரமைக்கும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்தோம். புதுப்பொலிவுடன் உள்ள காரை தற்போது பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து கார் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

வரும், 15ம் தேதி, காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்திற்கு கார் திரும்ப அனுப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி காங்., எம்.பி., செல்லகுமார் கொடியசைத்து வியாழக்கிழமை துவக்கி வைக்க உள்ளார் என்று அவர் தெரிவித்தார்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.